මූලාශ්රයක් යාවත්කාලීන විය
அசாதாரண இயற்கைச் சூழல் நிலைமைகளுக்கும் முகங்கொடுக்கவும், அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ளவும் முன்னாயத்தச் செயற்பாடுகள் அவசியம் - பிரதமர்
காலநிலை மாற்றத்தின் மத்தியில் ஏற்படும் திடீர் அனர்த்தங்களுக்கும் அசாதாரண இயற்கைச் சூழல் நிலைமைகளுக்கும் முகங்கொடுக்கவும், அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ளவும் முன்னாயத்தச் செயற்பாடுகள் அவசியம் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய காலநிலை மாற்றத்தின் மத்தியில் ஏற்படும் திடீர் அனர்த்தங்களுக்கும் அசாதாரண இயற்கை நிலைமைகளுக்கும் முகங்கொடுப்பதற்கும், அதனால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைத்துக்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் எனவும், அனர்த்த முகாமைத்துவம் ஒரு துறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் பல்வேறு துறைகளின் ஊடாக ஒருங்கிணைந்த தலையீடு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நவம்பர் 10ஆம் திகதி நாரஹேன்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரதமரின் பங்குபற்றுதலுடன், ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் நிபுணாராச்சியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த நவம்பர் 06ஆம் திகதி பெய்த கடும் மழையினால் கொழும்பு மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்த நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. இதன்போது, தற்போது நிலவும் காலநிலை மாற்றங்களின் மத்தியில் இவ்வாறான திடீர் அனர்த்தங்களுக்கும் அசாதாரண இயற்கை நிலைமைகளுக்கும் முகங்கொடுப்பதற்கும், அதனால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைத்துக்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், அனர்த்த முகாமைத்துவம் ஒரு துறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் பல்வேறு துறைகளின் ஊடாக ஒருங்கிணைந்த முறையில் செயற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், கொழும்பு மாவட்டமும் கொழும்பு நகரமும் தனித்துவமான புவியியல் மற்றும் நகர்ப்புறத் தன்மைகளைக் கொண்ட பிரதேசமாகும் எனவும், தற்போது எதிர்கொள்ள நேர்ந்துள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் நீர் தேங்கும் நிலைமைகள் நீண்ட காலமாக உரிய தீர்வுகள் காணப்படாத பல பிரச்சினைகளின் விளைவாகும் எனவும் சுட்டிக்காட்டிய பிரதமர், கழிவகற்றல் முகாமைத்துவம் முதல் நீர்வழிகளை உரிய முறையில் பேணுதல், தாழ்வுநிலங்களைப் பாதுகாத்தல் வரையிலான விரிவான வேலைத்திட்டத்தின் கீழ் இச்சிரமங்களுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். இக்கூட்டத்தில், கொழும்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கையும் மழைநீரையும் கட்டுப்படுத்துவதற்காக ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள பிரதான திட்டங்கள் பற்றிய விபரங்களைக் கொழும்பு மாவட்டச் செயலாளர் கினிகே பிரசன்ன ஜனக குமார சமர்ப்பித்தார். அதற்கமைய, களனி கங்கைத் தாழ்வுநிலப் பிரதேச வெள்ளப்பெருக்குக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு இணையாக, கொலன்னாவ பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்காக 15,000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம், கடுவெல பிரதேசத்தின் அனைத்து நீர்வழிகளையும் துப்புரவு செய்து அபிவிருத்தி செய்வதற்காக 450 மில்லியன் ரூபா செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம், கொலன்னாவையின் பிரதான 4 வாவிகளைத் துப்புரவு செய்து அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம், நீர்ப்பாசனத் திணைக்களத்தினால் களனி கங்கைக் கரைகளை அபிவிருத்தி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டம். ஆகியன உள்ளிட்ட, மாவட்டச் செயலாளரினால் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் தொடர்பில் பிரதமர் விசேட கவனம் செலுத்தினார். இத்திட்டங்களுக்கு மேலதிகமாக, எதிர்காலத்தில் மீண்டும் இவ்வாறான அனர்த்த நிலைமைகள் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைத்துக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. பல வருடங்களாக உரிய தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படாமையால் தீவிரமடைந்துள்ள பிரச்சினைகளுக்கு மேலும் தாமதிக்காமல் அவசியமான சரியான தீர்மானங்களை மேற்கொண்டு செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார். அத்துடன், வாய்க்கால்களையும் நீர்வழிகளையும் துப்புரவு செய்வது அனர்த்த நிலைமை ஏற்படும்போது மாத்திரம் மேற்கொள்ளப்படும் செயற்பாடு அல்ல எனவும், அது தொடர்ச்சியாகவும் இடைவிடாத பராமரிப்புடனும் பேணப்பட வேண்டிய செயற்பாடாகும் என்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். இதற்கு மேலதிகமாக, கொழும்பு மாவட்டத்தினுள் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் இதுவரையான முன்னேற்றம், மாவட்டத்தினுள் இடம்பெறும் கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பிரஜா சக்தி வேலைத்திட்டம் தொடர்பிலும் பிரதமரின் விசேட கவனம் ஈர்க்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், இலங்கைப் பாராளுமன்றப் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, நகரத் திட்டமிடல் மற்றும் வீடமைப்புப் பிரதி அமைச்சர் எரங்க குணசேகர உள்ளிட்ட கொழும்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், மேல்மாகாணப் பிரதம செயலாளர் பிரதீப் புஷ்பகுமார உள்ளிட்ட கொழும்பு மாவட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
සම්පූර්ණ වාර්තා
News.lkஅசாதாரண இயற்கைச் சூழல் நிலைமைகளுக்கும் முகங்கொடுக்கவும், அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ளவும் முன்னாயத்தச் செயற்பாடுகள் அவசியம் - பிரதமர்

News.lkகாலநிலை மாற்றத்தின் மத்தியில் ஏற்படும் திடீர் அனர்த்தங்களுக்கும் அசாதாரண இயற்கைச் சூழல் நிலைமைகளுக்கும் முகங்கொடுக்கவும், அனர்த்தங்களைக் குறைத்துக்கொள்ளவும் முன்னாயத்தச் செயற்பாடுகள் அவசியம்

සාරාංශය
இதன்போது, தற்போது நிலவும் காலநிலை மாற்றங்களின் மத்தியில் இவ்வாறான திடீர் அனர்த்தங்களுக்கும் அசாதாரண இயற்கை நிலைமைகளுக்கும் முகங்கொடுப்பதற்கும், அதனால் ஏற்படக்கூடிய இழப்புகளைக் குறைத்துக்கொள்வதற்கும் தயாராக இருக்க வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய பிரதமர், அனர்த்த முகாமைத்துவம் ஒரு துறைக்குள் மட்டுப்படுத்தப்படாமல் பல்வேறு துறைகளின் ஊடாக ஒருங்கிணைந்த முறையில் செயற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.