பியங்கர ஜயரத்னவிற்கு 07 வருட கடூழிய சிறை
முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(01) தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் தீர்ப்பளித்தார். 2014ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்கள் குழுவொன்றுக்கு உணவு வழங்குவதற்காக ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கிலிருந்து 330,000 ரூபா பணத்தை செலவிட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை, குறித்த செயலை செய்வதற்கு ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த ஊழல் குற்றச்சாட்டுகளில் சந்தேகநபர் குற்றவாளியென தீர்ப்பளித்த நீதிமன்றம், 14 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. குற்றச்சாட்டொன்றுக்கு 07 வருடங்கள் வீதம் 02 குற்றச்சாட்டுகளுக்கும் 14 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும் சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். தனது சேவைபெறுநர் நோய்வாய்ப்பட்டுள்ளதால் தண்டனையை தளர்த்தி உத்தரவிடுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்திருந்தார். குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளதால் சமூகத்திற்கு முன்மாதிரியாக அமையும் வகையில் அவருக்கு அதிகபட்ச தண்டனை உத்தரவை வழங்குமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டார். விடயங்களை ஆராய்ந்த நீதிபதி 02 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டொன்றுக்கு 07 ஆண்டுகள் வீதம் 14 வருட சிறைத்தண்டனை விதித்தார். சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று பிற்பகல் அழைத்துச் செல்லப்பட்டார்.
-559945.jpg)