தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமைகளை நடத்திச்சென்ற 27 நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து குறித்த நிறுவனங்களின் பெயர்கள் வௌிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பிரமிட் முறைமைகளில் ஈடுபடுதல், அதனை பராமரித்தல் மற்றும் ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(28) உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எயார்பஸ் கொடுக்கல் - வாங்கலில் 100 மில்லியன் ரூபா இலஞ்சமாக பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பிலேயே விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்று முறைப்பாட்டாளர் தரப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சந்தேகநபர் சார்பான பிணை கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
வழக்குடன் தொடர்புடையதாக நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டுள்ள வழக்கு கோப்புகள் தொடர்பில் முறையான வழிமுறைகளைப் பின்பற்றாது, அதனை நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திற்கு அனுப்பியமை குறித்தக் காரணங்களைக் சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு நிரந்தர மூவரடங்கிய மேல் நீதிமன்றம் அறிவித்தல் பிறப்பித்துள்ளது.
கிராண்ட்பாஸ் பகுதியிலுள்ள வீட்டின் மூன்றாவது மாடியிலிருந்து வீழ்ந்து 15 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கீழே வீழ்ந்ததில் காயமடைந்த சிறுமி, கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சிறுமியின் பெற்றோர் வெளிநாட்டில் தங்கியுள்ள நிலையில், அவர் தனது பாட்டி மற்றும் சித்தப்பாவுடன் வீட்டில் வசித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் விடயங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பெருமளவான டொலர்களை வௌிநாடுகளுக்கு அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெப்ரி மொஹமட் என்பவரின் பணத்தை பயன்படுத்தி, நாட்டிற்கு சட்டவிரோதமான முறையில் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து இலங்கை சுங்கம் விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளது.
புறக்கோட்டையிலுள்ள தங்க நகைக் கடை உரிமையாளர் ஒருவர் தொடர்பிலேயே இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுங்கம் தெரிவித்துள்ளது.
அவர் 80 கிலோகிராமுக்கும் அதிகளவிலான தங்கத்தை இலங்கைக்கு கொண்டுவந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தற்போது குறித்த தங்கத்தைக் கண்டறிவதற்காக பல குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொருட்களை இறக்குமதி செய்யும் போர்வையில் வெளிநாடுகளுக்கு டொலர்களை அனுப்பிய 36 போலி நிறுவனங்களை நிறுவிய பாரியளவிலான கடத்தல்காரர் என கூறப்படும் ஜெப்ரி மொஹமட் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவை கைது செய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பிரவுன்ஸ் ஹில் காணி தொடர்பான நிதி தூய்தாக்கல் குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினர் முன்வைத்த கோரிக்கையை ஆராய்ந்த மாத்தறை நீதவான் சதுர திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முறையற்ற விதத்தில் ஈட்டப்பட்ட பணத்தைப் பயன்படுத்தி மாத்தறை - பிரவுன்ஸ் ஹில் பிரதேசத்தில் காணியொன்றை கொள்வனவு செய்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, அவரது மனைவியின் சகோதரியான அயோமா கலப்பத்தி, அவரது கணவர் திஸ்ஸ கலப்பத்தி மற்றும் முதித ஜயகொடி ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலையடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செயன்முறை பரீட்சைகள் திட்டமிட்டவாறு நடைபெறும் என கல்வி பிரதி அமைச்சர் டொக்டர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பலத்த மழையுடனான வானிலையினால் ஆறுகளை அண்மித்த தாழ்நில பகுதிகளில் வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தினால் எச்சரிக்கை அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நகலகம், ஹங்வெல்ல, க்ளென்கோஸ், கித்துல்கல, ஹெலாம்புவ, தெரணியகல, ஆகிய பகுதிகளில் களனி கங்கையின் நீர்மட்டம் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளது.
புட்டுபவுல பகுதியில் களு கங்கையின் நீர்மட்டமும், மாகுர பகுதியில் மாகுர கங்கையின் நீர்மட்டமும் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினப்புரி பகுதியில் களு கங்கையும், மில்லகந்த பகுதியில் குடா கங்கையும் சிறு வௌ்ள மட்டத்தை எட்டியுள்ளன.
பத்தேகம, தவலம பகுதிகளில் கிங் கங்கை எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளதுடன், பாணதுகம பகுதியில் நில்வளா கங்கை சிறு வௌ்ள மட்டத்தை எட்டியுள்ளது.
அத்துடன், மொரகஸ்வெவ பகுதியில் தெதுரு ஓயாவும், படல்கம பகுதியில் மஹா ஓயாவும் எச்சரிக்கை மட்டத்தை எட்டியுள்ளன.
இந்நிலையில், குறித்த பகுதிகளில் கங்கைகளின் இரு மருங்கிலும் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் சிறைக்கைதி ஒருவருக்கு வழங்கிய ஜனாதிபதி மன்னிப்பை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் இன்று(26) உத்தரவிட்டுள்ளது.
பராமரிப்பு கொடுப்பனவை செலுத்தத் தவறிய குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்ட ஒருவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டதை சவாலுக்குட்படுத்தி, அவரது மனைவியால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை அறிவித்த போதே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
விகாரமகாதேவி பூங்காவில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தின் போது பலாங்கொடை கஸ்ஸப தேரர் பொதுமக்களை ஆத்திரமூட்டும் மற்றும் தவறாக வழிநடத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் இன்று கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் கட்சித் தலைமையகத்திலிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடனடியாக விடுதலை செய்யுமாறு கோரி, பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினர் கடந்த சில நாட்களாக கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, பொதுமக்களை ஆத்திரமூட்டும், தவறாக வழிநடத்தும் மற்றும் மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையிலான பொய்யான கருத்துகளை பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையக அமைப்பாளர் ஜகத் பஸ்நாயக்க முறைப்பாடு செய்துள்ளதாக கறுவாத்தோட்டம் பொலிஸார் இன்று நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.
விகாரமகாதேவி பூங்காவிற்கு 2 கத்திகளுடன் வந்த இருவர் தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் கடந்த 22ஆம் திகதி ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்தானது முற்றிலும் பொய்யானதும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் பிழையானதுமான கருத்தாகும் என பொலிஸார் கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் சுட்டிக்காட்டினர்.
போலியான கருத்துகளை மக்கள் மயப்படுத்துவது பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98ஆவது பிரிவை மீறும் செயலாகும் என்பதால் குறித்த கருத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான திருத்தப்படாத காணொளிகளை பொலிஸாரிடம் வழங்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிடுமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
விடயங்களை ஆராய்ந்த நீதவான், குறித்த கருத்துக்கள் தொடர்பான திருத்தப்படாத காணொளிகளை பொலிஸாருக்கு வழங்குமாறு ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டதுடன், விசாரணைகளின் முன்னேற்றத்தை துரிதமாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் புத்தளம், வண்ணாத்திவில்லு - லெக்டோஸ் வத்த பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வெடிபொருட்களை சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட அபு உமர் என அழைக்கப்படும் மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா மற்றும் மொஹமது நெளஃபர் மௌலவி ஆகியோருக்கு 12 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
பிரதிவாதிகள் தடுப்புக் காவலிலும் விளக்கமறியலிலும் கழித்த காலத்தைக் கழித்து குறித்த சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.
லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
வங்காள விரிகுடாவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு கடற்பரப்புகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழமுக்கம், தற்போது ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழைடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும், அனுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழமுக்கம், இன்று (26) புயலாக வலுவடையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, மேல், சப்ரகமுவ, தென், வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நேற்று (25) காலை 8.30 மணிமுதல் இன்று (26) அதிகாலை 3.00 மணி வரையான காலப்பகுதிக்குள் கிளிநொச்சி - பூநகரி பகுதியில் அதிக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அங்கு 163 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன் மன்னார் மாவட்டத்தின் இலுப்பை கடவை பகுதியில் 148 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் தொல்புரம் பகுதியில் 110 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன் மீசாலையில் 101 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலையினால் களு கங்கையின் நீர்மட்டம் மில்லகந்த மற்றும் மகுர ஆகிய பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்திலுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலையினால் 5 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்கள் உள்ளிட்ட சிலரை அங்கிருந்து வெளியேறுமாறு கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அவர்கள் அங்கிருந்து வௌியேற நடவடிக்கை எடுத்தனர்.
விகாரமகாதேவி பூங்காவில் பத்தாவது நாளாக இன்று சத்தியாக்கிரகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேல், சப்ரகமுவ, தென், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு அந்தமான் தீவுகளை அண்மித்த வங்காள விரிகுடா கடற்பரப்பில் காணப்பட்ட குறைந்த காற்றழுத்த பிரதேசம் தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.
இந்த தொகுதியானது இன்று (25) வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்குப் பகுதியினூடாக நகர்ந்து ஆழமான தாழமுக்கமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய, நாளை (26) இது புயலாகவும், 27ஆம் திகதி காலை வங்காள விரிகுடாவின் மேற்கு - மத்திய கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் இது பாரிய புயலாகவும் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் இல்லை என்ற போதிலும், காற்றின் போக்கு நாட்டை ஊடறுத்து பரவுவதன் காரணமாக தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது
இதனிடையே, வங்காள விரிகுடாவின் ஆழமான கடற்பரப்புகளில் பயணிக்கும் பலநாள் கடற்றொழில் படகுகள், மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன், குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூகத்தினரையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது வட அகலாங்கு 10 முதல் 20 வரையும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையான கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, ஈரவலயத்தில் உள்ள ஆறுகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவ பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இது தொடர்பில் தெரிவிக்கையில், நில்வளா, களனி, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா, மகா ஓயா ஆகியவற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த 10, 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவுகள், நீரில் மூழ்குதல் மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற அனர்த்தங்களே இதற்கு காரணம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 28 வீடுகள் முழுமையாகவும், 1,807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மேலும், 23 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவசர அனர்த்த நிலைமைகளின் போது, 117 என்ற துரித அழைப்பு இலக்கத்தினூடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு நேரடியாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் 109 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருட்களை கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
முழுநாடும் ஒன்றாக தேசிய செயற்றிட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் ஊடாக அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஆகியன ஒன்றிணைந்து இந்த சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ளன.
கடற்படையால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 2,641 கிலோ 403 கிராம் ஐஸ்,
1944 கிலோ 257 கிராம் ஹெரோயின்,
256 கிலோ 200 கிராம் கொக்கெய்ன்,
65 கிலோகிராமுக்கும் அதிக ஹஷீஷ்,
86,126 கிலோ மற்றும் 51 கிராம் பீடி இலைகள்,
4 மில்லியனுக்கும் அதிகமான போதை வில்லைகள்,
1548 கிலோ 702 கிராம் கேரள கஞ்சா ஆகிய போதைப்பொருட்கள் அடங்குகின்றன.
இதனிடையே, மாத்தறை - தலல்ல, நாஒட்டுன்ன கடற்கரையில் 561 கிலோகிராம் ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்கள் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றின் பெறுமதி 11.8 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறையிலுள்ள பிக்குகள் தாம் சார்ந்துள்ள பீடம் அல்லது தரப்பினரைத் தௌிவுபடுத்தி, அவர்களின் துறவற ஆடைகளை அகற்றுவது தொடர்பான கட்டளைகளை உள்ளடக்கும் வகையில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நிலையான கட்டளைகளில் திருத்தம் செய்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நீதியமைச்சரின் அனுமதிக்கமைய பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமாரவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நிலையான கட்டளைகளின் திருத்தங்களுக்கு அமைய பௌத்த பிக்குகள் எவரேனும் கைதியாக சிறையிலடைக்கப்படும் போது, அவர்கள் அதுவரை அணிந்திருந்த துறவற ஆடைகள் அகற்றப்படுவது தொடர்பில் பௌத்த விவகார திணைக்களத்தினூடாக உரிய பீடம் அல்லது தரப்புக்கு அறிவிக்கப்பட வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய பீடம் அல்லது தரப்பினால் துறவற ஆடைகளை அகற்றுவது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் 10 நாட்களுக்குள் பௌத்த விவகார திணைக்களத்தின் ஊடாக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் குறித்த திருத்தங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் எந்தவொரு பதிலும் கிடைக்காவிட்டால், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உரிய விதிமுறைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையிலடைக்கப்படும் பிக்கு ஒருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் சந்தர்ப்பத்தில், அவர் சிறையில் அடைக்கப்பட்ட போது அணிந்திருந்த துறவற ஆடையை அவ்வாறே தொடர்ந்தும் அணிந்திருக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் உரிய பீடம் அல்லது தரப்பினால் அவ்வாறு துறவற ஆடைகளை அணிந்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்காவிட்டால், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உரிய கட்டளைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பீடம் அல்லது தரப்பிடமிருந்து பெறப்பட வேண்டிய அனுமதிக்காக, பிக்கு சிறையிலடைக்கப்பட்ட நாள் முதல் 7 வேலை நாட்களுக்குள் பௌத்த விவகார திணைக்களத்துக்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரிதொரு மதத்தைச் சேர்ந்த மத குரு ஒருவர் கைதியாக சிறையில் அடைக்கப்படும் போதும் அல்லது சிறையிலிருந்து விடுவிக்கப்படும் போதும் தேவையான மாற்றங்களுடன் இந்த உத்தரவுகள் அவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை - தலல்ல, நாஓட்டுன்ன கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் எடை 475 கிலோகிராமிற்கும் அதிகமானது என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த போதைப்பொருட்களின் பெறுமதி 450 கோடி ரூபாவிற்கும் அதிகமாகும்.
கடற்படையினரும் கரையோர பாதுகாப்பு திணைக்களமும் இணைந்து குறித்த கடற்பரப்பில் இன்று (24) முன்னெடுத்த கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, 10 உரப்பைகள் மற்றும் 11 பயணப் பொதிகளுடன், போதைப்பொருள் தொகையை கொண்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரின் விசேட நிபுணத்துவ ஒத்துழை்ப்புடன் குறித்த போதைப்பொருள் தொகை மேலதிக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போது, 200 பொதிகளில் அடைக்கப்பட்ட 200 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 275 பொதிகளில் அடைக்கப்பட்ட 275 கிலோகிராமிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்பட்டதாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை பார்வையிடுவதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர உள்ளிட்ட குழுவினர் இன்று (24) பிற்பகல் அங்கு விஜயம் செய்திருந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஆனந்த விஜேபால, கரையோரப் பாதுகாப்புப் படையினரும், இலங்கை கடற்படையினரும் கடலில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பெருமளவில் தீவிரப்படுத்தியுள்ளதன் விளைவாகவே, சமூகத்தில் கலக்கவிருந்த பாரிய அளவிலான போதைப்பொருட்கள் தடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டிருந்த அரசியல் கலாசாரம் மற்றும் அரசியல் ஆசீர்வாதத்தின் ஊடாகவே போதைப்பொருள் கடத்தல்காரர்கள் செயற்பட்டதாகவும், தற்போதைய அரசாங்கம் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், நாட்டில் 48 திட்டமிட்ட குற்றக் குழுக்கள் செயற்பாட்டில் உள்ளதாகவும், மேலும் 48 குழுக்கள் செயலற்ற நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இவற்றில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டின் பிள்ளைகளை பலிகொடுத்துவிட்டு இனியும் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது எனவும், இந்த கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டங்களை வலுப்படுத்துவதை அரசாங்கம் தமது பொறுப்பாகக் கருதுவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் நடைபெறும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இன்றைய(22) போட்டியில் இலங்கை அணி மகத்தான வெற்றியை ஈட்டி சரித்திரம் படைத்துள்ளது.
போட்டியில் இங்கிலாந்து நிர்ணயித்த 430 ஓட்டங்கள் இமாலய இலக்கை இலங்கை அணி 49.5 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு கடந்து மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியது.
அண்மைக் காலமாக தோல்விகளால் துவண்டுபோயிருந்த இலங்கை அணிக்கும் இரசிகர்களுக்கும் புத்துணர்ச்சி அளித்த போட்டியாகவும் வெற்றியாகவும் இது அமைந்தது.
சமீப காலத்தில் இலங்கை விளையாடிய போட்டிகளில் இரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அமரச் செய்து மிகுந்த எதிர்பார்ப்பையும் அதேவேளை இறுதிவரை விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் பரபரப்பை ஏற்படுத்திய போட்டியாகவும் அமைந்ததென்றால் அது மிகையாகாது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 429 ஓட்டங்களைக் குவித்தது.
அணித்தலைவர் ஹெரி புரூக் 116 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 21 பௌண்டரிகளுடன் 202 ஓட்டங்களை விளாசினார்.
இது சர்வதேச ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஒருவர் இரட்டை சதமடித்த முதல் சந்தர்ப்பமாகும்.
இறுதிவரை ஆட்டமிழக்காத வில் ஜெக்ஸ் 66(30) ஓட்டங்களையும் ஜோ ரூட் 69(66) ஓட்டங்களையும் டொம் பென்டன் 50 ஓட்டங்களையும் பெற்றனர்.
இதன்போது ஹெரி புரூக் - வில் ஜெக்ஸ் ஜோடி 79 பந்துகளில் 185 ஓட்டங்களைப் பகிர்ந்தது.
மாபெரும் இலக்கான 430 ஓட்டங்களை நோக்கி பதிலளித்தாடிய இலங்கை அணி 4.2 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு முதலிரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது.
இதனால் வழமை போன்று இலங்கை தோல்விடைந்துவிடும் என்ற எண்ணம் இரசிகர்களுக்கு ஏற்பட்டாலும் அதனை பொய்யாக்கும் வகையில் அவிஷ்க பெர்னாண்டோவும் பவன் ரத்நாயக்கவும் அபாரமாக விளையாடினர்.
இவர்கள் 3ஆம் விக்கெட்டுக்காக 166 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
83 பந்துகளை எதிர்கொண்ட அவிஷ்க பெர்னாண்டோ 2 சிக்ஸர்கள், 11 பெண்டரிகளுடன் 97 ஓட்டங்களைப் பெற்றார்.
தொடர்ந்து அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பவன் ரத்நாயக்க 106 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 15 பௌண்டரிகளுடன் 130 ஓட்டங்களை குவித்தார்.
அதிரடி காட்டிய தசுன் ஷானக 50 பந்துகளில் 8 சிக்ஸர்கள், 6 பௌண்டரிகளுடன் 97 ஓட்டங்களை விளாசினார்.
இலங்கை அணி ஒரு கட்டத்தில் 47 ஓவர்களில் 406 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
பின்வரிசை வீரர்களான ஷஹன் ஆரச்சிகே, துனித் வெல்லாலகே, ஹேஷான் மலிங்க ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க இலங்கை அணி 49.3 ஓவர்களில் 423 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து கடும் நெருடிக்கடிக்குள்ளானது.
எனினும், களத்தில் தனி ஒருவராக நின்று நம்பிக்கையுடன் போராடிய ஜனித் லியனகே இறுதி ஓவரின் 5 ஆவது பந்தில் சிக்ஸரை விளாசி இலங்கைக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.
27 பந்துகளை எதிர்கொண்ட அவர் 3 சிக்ஸர்கள், 7 பௌண்டரிகளுடன் 61 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
இது சர்வதேச ஒருநாள் போட்டி ஒன்றில் இலங்கை அணி அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிலளித்தாடிக் கடந்த முதல் வெற்றியாகவும் பதிவானது.
நாட்டில் மழையுடனான வானிலை இன்று(22) முதல் மீண்டும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டை அண்மித்து நிலவிய கீழ் வளிமண்டல தளம்பல் நிலைமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பலத்த மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாமென வளிண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்களால் எற்படும் பாதிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெதுரு ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வாரியபொல, நிக்கவரெட்டிய, மஹவ, கொபேகனை, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராய்ச்சிகட்டுவ, ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வௌ்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையுடனான வானிலையை தொடர்ந்து நாட்டின் பல நீர்தேக்கங்கள் வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நதிகள் முகாமைத்துவ பிரிவின் பிரதம பொறியியலாளர் எஸ்.ஜெயன் பார்த்தசாரதி தெரிவித்தார்.
அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்த மனுவில் தலையீடு செய்து விடயங்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த இடையீட்டு மனுக்கள் தொடர்பான உத்தரவை இன்று(22) அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 14ஆம் திகதி தீர்மானித்திருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த இடையீட்டு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட பல பௌத்த பிக்குகள், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சில தன்னார்வ நிறுவனங்கள் குறித்த இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனுக்கள் முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக தாம் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுவில் தலையிட்டு விடயங்களை முன்வைப்பதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலங்களை மீளப்பெற்று திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 06ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த சட்டமூலம் வெளியிடப்பட்டது.
திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கு பயனுள்ள சட்டமியற்றல் அவசியமானது என்பதை ஏற்றுக்கொள்வதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் காணப்படும் சில ஏற்பாடுகள் இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனங்களுக்கு முரணாக உள்ளதாக கருதுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பல பிரதான விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் வழங்கும் ஒப்புதல் வாக்குமூலங்களை சாட்சியாக ஏற்றுக்கொள்ளுதல், '
தீவிரமான குற்றங்கள்' என்பது மிகவும் பரந்த அளவில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளமை, திட்டமிட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள நிபந்தனைகள், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குதல், விளக்கமறியலில் வைத்தல் மற்றும் சந்தேகநபர்களை விடுதலை செய்தல் என்பன தொடர்பில் நீதிமன்றத்திற்குரிய விருப்பு அதிகாரத்தை மட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயங்களை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறும் அதில் குறிப்பிடத்தக்க திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதத்தின் ஊடாக பரிந்துரைத்துள்ளது.