நிதி மோசடி குறித்த விசாரணைக்கு அவுஸ்திரேலியா ஆதரவு
நிதியமைச்சின் கணினி கட்டமைப்பின் ஊடாக சைபர் குற்றவாளிகள் குழு பல சந்தர்ப்பங்களில் சுமார் 2.5 மில்லியன் டொலர் பணத்தைத் திருடிய சம்பவம் தொடர்பில் 07 அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.திறைசேரியின் பொதுக்கடன் முகாமைத்துவ அலுவலகம் மற்றும் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் 07 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.மேலதிக விசாரணைகளுக்காக அவர்கள் பயன்படுத்திய கணினிகளும் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.விசாரணைகளுக்காக கணினி அவசர தயார்நிலை குழுவின் உதவிகளும் பெறப்பட்டுள்ளதாக பொலிஸால் தெரிவித்தனர்.சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸார் இணக்கம் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு கணினி அவசர தயார்நிலை குழுவுடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைவாக இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.விசாரணைகளுக்கு தேவையான தரவுகள் அவுஸ்திரேலிய பெடரல் பொலிஸாருடன் பரிமாற்றப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
