அர்ஜுன ரணதுங்கவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க மற்றும் அவரது சகோதரர் தம்மிக ரணதுங்க ஆகியோருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் இன்று(23) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.மேல் நீதிமன்ற நீதிபதி ரஷான்த கொடவெல முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.2017 - 2018 காலப்பகுதியில் 06 மாத காலத்திற்காக பெட்ரோலியக் கூட்டுதாபனத்தின் ஊடாக நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக காணப்பட்ட நீண்ட கால 03 விலைமனுகோரலை இரத்து செய்து, அவற்றுக்கு பதிலாக அதிக விலையின் கீழ் 27 விலைமனுக்களை செயற்படுத்தியதன் ஊடாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தியமை மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கமைய பிரதிவாதிகளுக்கு எதிராக இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இதன் பின்னர் பிரதிவாதிகள் இருவரும் தலா 05 மில்லியன் ரூபா பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.பூர்வாங்க வழக்கு விசாரணைகளை எதிர்வரும் மே 15ஆம் திகதி விசாரணை செய்ய திகதி நிர்ணயித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
