1 ஊடகம்
சர்வதேச கவனத்தை ஈர்த்த அம்பானியின் கோரிக்கை - காரணம் என்ன? கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபருக்குச் சொந்தமான நீர்யானைகளை (Hippos) பொறுப்பேற்று, பராமரிக்க இந்திய கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார். பல தசாப்தங்களாக கொலம்பியாவுக்குப் பெரும் சவாலாக விளங்கும் இந்த நீர்யானைப் பிரச்சினையைத் தீர்க்க, தனது 'வந்தாரா' (Vantara) விலங்கியல் பூங்கா மூலம் அவர் இந்த முன்மொழிவை வழங்கியுள்ளார். பப்லோ எஸ்கோபர், தனது ஆடம்பர பண்ணைக்காக சட்டவிரோதமாக ஒரு ஜோடி நீர்யானைகளை இறக்குமதி செய்திருந்தார். "கோகோயின் நீர்யானைகள்" என அழைக்கப்படும் இவை, அவரது மரணத்திற்குப் பின் கொலம்பியாவின் மாக்டலேனா நதிப் பகுதிகளில் பெருகத் தொடங்கின. தற்போது அவற்றின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை அழிப்பதற்கு (Cull) கொலம்பியா தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்,குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள 3,500 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட 'வந்தாரா' விலங்கியல் பூங்காவின் தலைமை அதிகாரி, கொலம்பிய சுற்றாடல் அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக, சுமார் 80 நீர்யானைகளை இந்தியாவுக்கு அழைத்து வந்து, அவற்றுக்குத் தேவையான ஆயுட்கால பராமரிப்பை வழங்க 'வந்தாரா' தயாராக உள்ளது. "ஒவ்வொரு உயிரும் முக்கியமானது" என்ற உயரிய நோக்கத்தில், அந்த உயிரினங்களைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தாம் ஏற்பதாக அக்குழுமம் தெரிவித்துள்ளது. ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட இந்த நீர்யானைகள், கொலம்பியாவின் நதிச் சூழலில் ஆக்கிரமிப்பு இனமாக மாறியுள்ளன. இதனால் உள்நாட்டு உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதுடன், அப்பகுதி கடற்றொழிலாளர்கள் மீது நீர்யானைகள் தாக்குதல் நடத்தும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. ஆனந்த் அம்பானியின் இந்தத் தனியார் பூங்காவில் ஏற்கனவே யானைகள், புலிகள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உள்ளன. இருப்பினும், குஜராத்தின் வெப்பமான காலநிலை சில விலங்குகளுக்குப் பொருத்தமற்றது என விலங்கு நல ஆர்வலர்கள் விமர்சித்து வரும் நிலையில், இந்த புதிய முயற்சி சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடயம் குறித்து கொலம்பிய அரசாங்கம் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.
கொலம்பியாவின் மறைந்த போதைப்பொருள் கடத்தல் மன்னன் பப்லோ எஸ்கோபருக்குச் சொந்தமான நீர்யானைகளை (Hippos) பொறுப்பேற்று, பராமரிக்க இந்திய கோடீஸ
