திருநீற்று புதன் இன்று
இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை நினைவுகூரும் மனமாற்றத்தின் காலமான தவக்காலம் இன்று(18) ஆரம்பமாகின்றது.இறைமகன் இயேசு கிறிஸ்து மக்களின் பாவங்களுக்காக ஏற்றுக்கொண்ட பாடுகள், மரணத்தை நினைவுகூர்ந்து உயிர்ப்பு பெருவிழாவுடன் மிக மகிழ்ச்சியோடு இறைமீட்பில் பங்குபெற அழைப்பு பெறும் காலமாக தவக்காலம் அமைகின்றது.உலகளாவிய ரீதியிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் திருவழிபாட்டின் முக்கிய காலங்களுள் ஒன்றான தவக்காலத்தில் இன்று அடியெடுத்து வைத்துள்ளனர்.இன்றிலிருந்து உயிர்த்த ஞாயிறு வரையான 40 நாட்கள் தவக்காலமாக கணிக்கப்படுகின்றது.திருநீற்று புதனான இன்று ஒவ்வொரு கிறிஸ்தவருடைய நெற்றியிலும் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் இடப்படுகின்றது.மண்ணிலிருந்து உருவான நாம் மண்ணுக்கே திரும்பிச்செல்வோம் என்ற உணர்வை நெற்றியில் இடப்படும் சாம்பல் உணர்த்துகின்றது.தவக்காலம் என்பது மன்னிப்பின் காலம், மனமாற்றத்தின் காலம், அருளின் காலம், இரக்கத்தின் காலம், அன்பை அதிகம் உணரும் காலம், அந்த அன்பை பிறருடன் பகிர்ந்துகொள்ளும் காலம்.செபம், தவம், தானம், ஒறுத்தல், நற்செயல்கள் வழியாக கடவுளோடு ஒப்புரவாக எம்மை அழைப்பதே தவக்காலத்தின் சிறப்பாகும்.மனம் வருந்தி, பழைய பாவ வாழ்க்கையை உதறி கிறிஸ்துவோடு இணைந்து அவருடன் உயிர்த்தெழ எம்மை தயார்படுத்தும் காலமாக தவக்காலம் காணப்படுகின்றது.
