வெளிநாட்டுத் தூதரகங்களின் தலைவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு சுற்றுலா அபிவிருத்தி ஆய்வுப் பயணம் நேற்றுடன் நிறைவு
கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தலைவர்களுக்காக, வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சுற்றுலா அபிவிருத்தி ஆய்வுப் பயணத்தின் இறுதி நாள் நேற்று (20). பயணத்தின் முதல் நாளில் (18), அவர்கள் பாசிக்குடா கடற்கரைக்குச் சென்றனர். பின்னர் அன்றிரவு, கிழக்கு பிராந்தியத்தின் கலாச்சார அடையாளத்தைப் பிரதிபலிக்கும் நடனங்களுடன் கூடிய இரவு விருந்து நடைபெற்றது. இதில் வெளிநாட்டு விவகாரங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் கலந்து கொண்டார். குழுவினரிடையே உரையாற்றிய அமைச்சர், கிழக்கு மாகாணத்தின் மூலோபாய முக்கியத்துவத்தையும் பொருளாதார ஆற்றலையும் வலியுறுத்தினார். சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்களின் கண்காட்சியிலும் குழுவினர் பங்கேற்றனர். நேற்று (19) காலை, குழுவினர் எறாவூர் ஏற்றுமதி பதப்படுத்தும் வலயத்திற்குச் சென்றனர். அதனைத் தொடர்ந்து, செருவவில பௌத்தக் கோயிலுக்குச் சென்று அங்கு நடைபெற்ற பௌத்த சமயச் சடங்குகளில் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் கோணேஸ்வரம் இந்து கோயிலுக்குச் சென்று அங்கு இந்து சமயச் சடங்குகளைச் செய்தனர். அன்று மாலை, திருகோணமலையில் உள்ள டி.எஸ்.கே. ஹோட்டலில் நடைபெற்ற முதலீட்டுக் கருத்தரங்கில், வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்துகொண்டார். பயணத்தின் மூன்றாம் நாளில் (20), இக்குழுவினர் திருகோணமலை கடற்படைத் தளத்தைப் பார்வையிட்டு, படகு சவாரியில் பங்கேற்றனர். பின்னர், அவர்கள் கடற்படை அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டனர். நேற்று மாலை, அவர்கள் கொழும்புக்குப் புறப்பட்டனர். இந்த மூன்று நாள் பயணத்தின் நோக்கம், கிழக்கு மாகாணத்தின் கலாச்சார, பொருளாதார, முதலீட்டு மற்றும் சுற்றுலாத் திறனை சர்வதேச சமூகத்திற்கு அறிமுகப்படுத்துவதும், முதலீடு, சுற்றுலா மேம்பாடு மற்றும் பிராந்திய ஒத்துழைப்புக்கான புதிய வாய்ப்புகளை ஊக்குவிப்பதும் ஆகும்
