சமிந்த குலரத்னவின் மனுவை பரிசீலிக்க தீர்மானம்
பாராளுமன்றத்தின் முன்னாள் பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மனுவிலுள்ள விடயங்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று(03) திகதி நிர்ணயித்தது.எந்தவொரு நியாயமான விசாரணையும் இன்றி தம்மை பணிநீக்கம் செய்வதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்தை வலுவிலக்கச் செய்யும் எழுத்தாணை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் ரோஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இந்த எழுத்தாணை மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.எழுத்தாணை மனுவிலுள்ள விடயங்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு முன்னதாக வழக்குடன் தொடர்புடைய முழுமையான அவதானிப்புகளை பெற்றுக்கொள்வது அவசியம் எனவும் அதற்கான கால அவகாசத்தை வழங்குமாறும் பிரதிவாதி சார்பில் மன்றில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார். விடயங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் மனுவுடன் தொடர்புடைய விடயங்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்காக எதிர்வரும் 18 மற்றும் 19ஆம் திகதிகளை ஒதுக்குவதாக உத்தரவிட்டது.
