வவுனியா மாநகர சபை மேயர் குறித்த வழக்கு ஒத்திவைப்பு
சுந்தரலிங்கம் காண்டீபன், பரமேசுவரன் கார்த்தீபன் உள்ளிட்டவர்கள் முறையே வவுனியா மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயராக செயற்படுவது தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற வழக்கை மேன்முறையீடு செய்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 15ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று(02) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.வவுனியா மாநகர சபைக்கான மேயர், பிரதி மேயர் தெரிவு செய்யப்படும் போது சட்டத்திற்கு முரணான வகையில் பிரதிவாதிகள் செயற்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.வவுனியா மாநகர சபையின் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் சுந்தரலிங்கம் காண்டீபன் மற்றும் பிரதி மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணியின் பரமேசுவரன் கார்த்தீபன் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டிருந்தனர்.வவுனியாவை சேர்ந்த எஸ்.கே.விஜயகுமார், எஸ்.பிரேமதாஸ் ஆகியோர் தாக்கல் செய்த எழுத்தாணை மனுவை பரீசிலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒக்டோபர் 21ஆம் திகதி இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்திருந்தது.இந்நிலையில் இது தொடர்பான வழக்கு இன்று மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
