1 sourceUpdated
லலித், குகன் வழக்கில் கோட்டாபய ராஜபக்ஸ சாட்சி
லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(29) சாட்சியமளித்தார். நிகழ்நிலை ஊடாக சாட்சி விசாரணை நடைபெற்றது. 2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பாக உறவினர்கள் தாக்கல் செய்த வழக்கிற்கமைய இந்த சாட்சி விசாரணை நடைபெற்றது. 2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களுக்காக ஊடக சந்திப்பை நடத்தத் தயாராக இருந்தபோது, வெள்ளை வேனில் வந்த குழுவினர் லலித் மற்றும் குகனை கடத்திச் சென்றிருந்தனர். இவர்கள் காணாமலாக்கப்பட்டமை குறித்து அப்போதைய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடக சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்ட போது, அவர்கள் உயிருடன் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். அந்த கூற்றை அடிப்படையாகக் கொண்ட விசாரணைகளின் போது அவரிடம் விபரங்கள் கோரப்பட்ட போது, அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவித்தலுக்கு அமையவே அந்த கூற்றை வெளியிட்டதாக ரம்புக்வெல்ல கூறியிருந்தார். இதற்கமைய, 2019 மார்ச் மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது. எனினும், பாதுகாப்பு பிரச்சினைகளை காரணம் காட்டி சாட்சியமளிப்பதை தொடர்ச்சியாக தவிர்த்து வந்த கோட்டாபய ராஜபக்ஸ, பின்னர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவானார். கடந்த பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி இந்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணிகள் அவருக்கு நிகழ்நிலை ஊடாக சாட்சியமளிக்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினர். அந்த கோரிக்கைக்கு ஜூன் 02ஆம் திகதி நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், அதற்கமையவே நேற்று சாட்சி விசாரணை நடைபெற்றது. கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ சாட்சியமளித்ததுடன், யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இருந்து முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி நுவன் போப்பகேவின் வழிநடத்தலின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. நீண்ட காலம் கடந்துவிட்டதால் தமக்கு அது தொடர்பான சம்பவங்கள் நினைவில்லை என கோட்டாபய ராஜபக்ஸ சாட்சியமளித்தார். அத்துடன், அரசியல் இலாபத்திற்காகவும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே சில தரப்பினர் கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிடுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். அதனை தொடர்ந்து, மேல் மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாகர சேனாரத்ன கடத்தப்பட்ட சம்பவம் குறித்து சாட்சியமளித்த கோட்டாபய ராஜபக்ஸ, தனக்கு அது குறித்து நினைவில்லை என கூறினார். மேற்கோள் சட்டத்தரணி நுவன் போப்பகே கீத் நொயார் காணாமல் போனமை உங்களுக்கு நினைவிருக்கிறதா? மேற்கோள் கோட்டாபய ராஜபக்ஸ நீதவான் அவர்களே, நான் அறிந்த வரையில் கீத் நொயார் காணாமல் போகவில்லை. சாட்சியப் பதிவு நிறைவடைந்ததுடன், மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Summary
2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பாக உறவினர்கள் தாக்கல் செய்த வழக்கிற்கமைய இந்த சாட்சி விசாரணை நடைபெற்றது.
What this story is about
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
